Wednesday, April 25, 2012

 ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
 ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்




தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஆன்மீக சுற்றுலா - துறையூர்

வாழ்க ஜோதி  வளர்க ஜோதி 
குருவே சரணம் 

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" நாங்கள் குருசாமியின் வழி காட்டுதலின்படி திருச்சி மாவட்டம் துறையூர் - க்கு சென்றிருந்தோம். அதை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் திருச்சி மாவட்டம் திருவல்லரை பெருமாள் கோவிலுக்கு முன்பு 1கிமி தொலைவில் வடஜெம்புகேஸ்வரர் ஆலயம் அருகே உள்ள ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு சென்றிருந்தோம். இது மிகவும் பழைமை வாய்ந்த சமாதி ஆகும். ஸ்வாமிகளின் குருபூஜை கார்த்திகை மாதம் 3 வது சோமவாரம் (திங்கற்கிழமை) வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.





 

பின்பு அங்கிருந்து துறையூர் சென்றோம்.  துறையூர் தெப்பகுளம் எதிரே அமைந்துள்ளது ஸ்ரீ குருகருணையானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதி. அவர்களை தரிசித்து விட்டு பின்பு சிக்கத்தம்பூர் பாளையம் சென்று அங்கே அமைந்திருக்கும் ஸ்ரீ பிரம்மானந்த ஸ்வாமிகளின் ஜீவ சமாதி சென்றிருந்தோம். ஸ்வாமிகளின் குருபூஜை வருகின்ற  29-9- 2012  அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது.


பின்பு  அங்கிருந்து துறையூர் பஸ் ஸ்டான்ட் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ கோலோச்சும் முருகன் கோவிலுக்கு சென்றோம். கலியுக வரதனை வணங்கி பின்பு அங்கு ஸ்ரீ ஜானகிராம் ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று திரும்பினோம்.